×

இலங்கையுடன் முதல் டெஸ்ட் இந்தியா ரன் குவிப்பு: ஹனுமா 58, பன்ட் 96 ரன் விளாசல்

மொகாலி: இலங்கை அணியுடனான முதல் டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன் குவித்துள்ளது.பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டி, நட்சத்திர வீரர் விராத் கோஹ்லியின் 100வது டெஸ்ட் என்பதால், அவருக்கு தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சிறப்பு தொப்பியை வழங்கி கவுரவித்தார். அடிலெய்டில் நேற்று மாரடைப்பால் காலமான ஆஸி. முன்னாள் நட்சத்திரம் ராட் மார்ஷுக்கு (74 வயது) இரு அணி வீரர்களும் மவுன அஞ்சலி செலுத்தினர்.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். ரோகித், மயாங்க் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்தது. ரோகித் 29 ரன், மயாங்க் 33 ரன்னில் வெளியேறினர். இந்தியா 80 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில், கோஹ்லி - ஹனுமா இணைந்து பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.

இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 90 ரன் சேர்த்தது. 100வது டெஸ்டில் சதம் விளாசி சாதனை படைப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், கோஹ்லி 45 ரன் (76 பந்து, 5 பவுண்டரி) விளாசி எம்புல்டெனியா பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.
அரை சதத்தை நிறைவு செய்த ஹனுமா (58 ரன், 128 பந்து, 5 பவுண்டரி) விஷ்வா வேகத்தில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். பன்ட் - ஷ்ரேயாஸ் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்தது. ஷ்ரேயாஸ் 27 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து பன்ட் உடன் ஜடேஜா இணைந்தார். ஜடேஜா பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியில் இறங்கிய பன்ட் இலங்கை பந்துவீச்சை சிதறடித்தார். இருவரும் 104 ரன் சேர்த்து மிரட்டினர். அமர்க்களமாக விளையாடி 96 ரன் (97 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசிய பன்ட், துரதிர்ஷ்டவசமாக லக்மல் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி நூலிழையில் சதத்தை நழுவவிட்டார்.முதல் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன் குவித்துள்ளது. ஜடேஜா 45 ரன், அஷ்வின் 10 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறறுகிறது.




Tags : India ,Sri ,Lanka ,Hanuma , First Test with Sri Lanka India run accumulation: Hanuma 58, Punt 96 runs
× RELATED ஆயுத உற்பத்தி தொழிற்சாலை இந்தியாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை